ஜெய்லானி பள்ளிவாசல் கட்டிடங்கள் அகற்றுவதை உடன் நிறுத்து : அசாத் சாலி கடிதம்
கூரகல, ஜெய்லானி பள்ளிவாசல் பூமியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச்சொந்தமான கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துங்கள். நீங்கள் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாகவே காரியங்கள் நடந்து வருகின்றன என தேசிய ஐக்கிய செயலாளர் அஸாத் சாலி அனுப்பி வைத்துள்ள கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அசாத் சாலி ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும்
குறிப்பிட்டுள்ளதாவது:-
கட்டிடங்களை அகற்றுவதற்காக சிவில் பாதுகாப்புப் படையின் ஒரு பகுதி கூரகலக்கு அனுப்பப்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படமாட்டாது என உத்தரவாதம் அளித்திருந்ததை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமக்கு நியாயம் கிடைக்கும் என்று முஸ்லிம்கள் நம்பியிருந்தவேளையில் அந்த இடத்தில் படைப்பலத்தை பிரயோகித்து முஸ்லிம்களை அச்சத்துக்கு உள்ளாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பல வருடங்களாக முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய வழிபாட்டுத் தலமாக இருந்தபோதிலும் அண்மைக் காலத்தில் தீவிர போக்குடைய குழுவொன்று இதில் தலையிட்டு பிரச்சினையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இன முறுகலை உருவாக்க முயற்சித்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு நாட்டில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாவதைத் தடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(VD)
No comments