கோவணமே தலைப்பாகையாகக் கடவது!
உலகில் முஸ்லிம்களுக்கு பல்பக்க நெருக்கடிமிக்க கால கட்டம் இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் இருந்தே கருக்கொண்டு விட்டது.
அதற்கு சமாந்தரமான ஒரு போக்கு இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டு விடும் என்ற தெளிவான சமிக்ஞைகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னரேயே வெளிப்பட்டபோதும் அது நமது பொது விவேகத்திலுள்ள குறைபாடு காரணமாகவும் பயங்கரவாதம் தொடர்பாக கட்டமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான எதிர்மறை தோற்றப்பாடு காரணமாகவும் விரைவாகக் கிட்டும் உடனடி இலாபத்தில் காட்டும் கண்மூடித்தனமான பேராசையின் காரணமாகவும் கருத்திற் கொள்ளப்படாமல் ஒதுக்கித் தள்ளப்பட்டது.
இலங்கை முஸ்லிம்களின் நலனில் நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ முதலாம் சிறுபான்மையான தமிழர் தரப்பின் அபிலாஷைகளும் அரசியலும் அடிக்கடி குறுக்கிடவே செய்கின்றது. அந்தப் போக்கின் பின்னாலுள்ள அரசியல் புவியியலின் யதார்த்தத்தை நமது வெகுஜனம் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை நமது 'விரிந்த' மனப்பாங்குள்ள தேசியவாத அரசியலாளர்கள் வழங்குவதில்லை.
அதற்கான காரணம் நமது சமூக உரிமையுடன் தொடர்பான அரசியலை விடவும் தனி மனித நலன் தொடர்பான அல்லது அதனை விட சற்று விரிவாகக் கூறினால் நமது குடும்பத்தின் நலன் தொடர்பான அரசியலுமே நம்மை கண் மூடித்தனமாக வழிகாட்டிக் கொண்டிருப்பதாகும். அந்தக் கண் மூடித்தனங்களுக்கு இலகுவில் விலையாகிப்போகும் நமது உள்ளுர் ஜமீந்தார்கள் ஏனைய ஊர்களின் உரிமைகளைச் சுரண்டி எடுத்துக் கொண்டுபோய் தத்தம் ஊர்களை சோடிக்கின்ற கண்கொள்ளாக் காட்சியில் நமது வெகுஜனம் மல்லாந்து இறும்பூதெய்தி நமது கச்சைகளாலேயே நாம் தலைப்பாகை சூட்டப்படுகின்றோம் என்பதை அடியோடு மறந்து விடுகின்றது.
தமிழர் உரிமைப் போராட்டம் ஒரு கட்டத்தின் பின்னர் தாங்களாகவே தங்களுக்கு உள்ளேயே துப்பாக்கிகளை இலக்குப்படுத்தும் கருமங்களைச் செய்யத் தொடங்கின. மூளையற்ற அந்தத் துப்பாக்கிகளின் அடுத்த கட்ட நகர்வு அடுத்த சிறுபான்மையை நோக்கி திரும்பியதும் நமது வரலாற்றின் யதார்த்தமே. மட்டுமன்றி அதன் தீவிரம் பள்ளி வாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்வர்களைப் பலி கொள்வது வரை நீண்ட சங்கதிகளும் நமது கறைபடிந்த வரலாறுதான்.
நூற்றாண்டுகளாக ஒரே திண்ணையில் படுத்துறங்கிய மக்களை உடுத்த உடையுடன் இடம் பெயரவைத்த இனச் சுத்திகரிப்பை நமது வலாறு கண்டதும் உண்மைதான். இவற்றின் பின்னாலுள்ள சமூக உளவியலை முஸ்லிம் மக்கள் மாத்திம்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினர் எதிர்பார்த்தமையும் நமது வரலாற்றின் தீராத துன்பியல் நாடகம்தான். அதற்காக அதன் பின்னால் நமது புத்தி களவாடப்பட்டு உணர்ச்சியின் விளை நிலமாக நமது சமூகம் ஆக்கி விடப்பட்டமைதான் நமது துர்ப்பாக்கியம்.
நமது உடனடி எதிர்வினையான நமது மனவெழுச்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய விவேகம் கொண்ட அரசியல் வெண் குதிரைகள் நமக்கச் சூடிய தலைப்பாகையினால் நாம் கிறங்கிப்போனோம். அந்தக் கிறக்கத்தில் நமக்குச் சூடப்பட்ட தலைப்பாகைகள் நமது கோவணத்தை உரிந்தெடுத்தே தயாரிக்கப்பட்டவை என்ற பிரக்ஞை அப்போது நமக்கு ஏற்படவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்த அரசியல் வெள்ளைக் குதிரைகள் எம்மை அம்மணமாக்கிய விஷயம் நமது புத்திக்கு இன்று வரைப் பலப்படவே இல்லை.
அதனால்தான் நமக்குக் கிடைத்த சந்தர்ப்ப சாதகச் சூழல் என்ற முட்டைகளை முட்டாள் தனமாகப் போட்டுடைத்த நமது புத்திசாலித்தனம் பள்ளிவாசல்களை நோக்கி அரச பயங்கரவாத்தின் சட்டபூர்வமில்லாத குழந்தைகள் அடர்ந்தேறுவதை கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க வைத்துள்ளது.
நமது சமூகம் அடைந்துள்ள இந்தக் கையறு நிலைக்கு தேசிய அரசியல் வாதிகளின் அப்பட்டமான சுயநல வேட்கைகள்தான் காரணம் என்பதனை நாம் கண்டு கொள்ளாது அவர்கள் காட்டிய பயங்கரவாத பூச்சாண்டிகளை முழுமையாக நம்பி அதிகாரத்தை தவிர்க்க முடியாத அளவுக்கு தாரை வார்த்துவிட்டு - அவர்கள் நமக்குச் சூடிய தலைப்பாகைகளால் மதிமயங்கிப்போய் இருந்துவிட்டு தற்செயலாகச் சுதாகரித்தபோதுதான் நமது கோவணமே நமக்குத் தலைப்பாகையாக சூடப்பட்டுள்ளமையை நாம் உணர்ந்துள்ளோம்.
கால்பந்தாட்டம் நடைபெற்ற அருமையான சந்தர்ப்பங்களில் நாம் போட்ட முட்டாள்தனமான 'சேம் சைட் கோல்' களையே நமது வெற்றி வாகையாகக் கருதி மல்லாந்து கிடந்த சமூகம் நாம் 'சேம் சைட் கோல்' போடுவதற்காக வழிநடாத்தப்படுகின்றோம் என்று கூறியவர்களை முட்டாள் தனமாக ஒதுக்கிவிட்டது.
வேறு வழியின்றி ஒரு 'செவைவ' லுக்காக சில நாடகங்கள் ஆடி முடிப்பதன் மூலம் தம்முடைய கோவணத்தை காப்பாற்றியவர்களை மீண்டும் கோமாளிகளாகக் காட்டி அவர்களின் போராட்ட உபாயங்களை சில்லறை இலாப நட்டக் கணக்குகளுக்குள் மழுங்கடித்து விடும் ஒரு புதிய முயற்சி இன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.
அந்த அரங்கேற்றமானது இன்று பல்வேறு திசைகளில் இருந்தும் நமது சமூக மேடையாகிய வட்டக் களரிகளுக்கு வந்துள்ளது.
அதில் முக்கியமானது மு.காவின் தலைமை தனது நீதி அமைச்குப் பதவி என்ற கோவணத்தை தாமாகவே அவிழ்த்து வீசிவிட வேண்டும் என்பதாகும்.
மக்களின் கோவணத்தை அடகு வைத்துவிட்டு அமைச்சுப் பதவிகளையும் அதன் ஆடம்பரங்களையும் பரிசாகப் பெற்றவர்கள் அதற்கான பிரதி உபகாரமாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினர்.
தங்களின் திருகு தாளத் தில்லுமுல்லுகளால் மக்கள் கோவணம் இல்லாது இருக்கின்றார்கள் என்பதனை லாவகமாக மறைத்துவிட்டு அதனை முதலாம் சிறுபான்மைக்கு எதிரான இனவாதமாகக் கட்டமைத்து ஒரு மதிமயக்க நிலைக்கு மக்களைப் பேணிவந்தார்கள்.
மக்களுக்கிருந்த அனைத்து உத்தரவாதங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு நமக்கென்று இருக்கின்ற ஒரேயொரு கோவணத்தை அவிழ்த்து தாமாகவே எறிந்துவிடல் வேண்டும் என்ற ஒரு கோஷத்தை நோக்கி வழி நடாத்தப்படும் மற்றொரு இழி நிலைக்கு மக்கள் கொண்டுவந்து விடப்பட்டுள்ளனர்.
இப்போது இதனை வாசிப்பவர்கள் 2005ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க வின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒரு முறை மேலோட்டமாக வாசித்துப் பார்ப்பின் நாம் சாணக்கியம் என்ற வார்த்தைக்கு எவ்வளவு தூரம் அந்நியமாகி இருந்தோம் என்பது புலப்படும். இன்று நமக்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆறுதல் நமது சமூகத்தை எந்தக் கட்டத்திலும் கைவிடத் தயாரில்லாத ஒரேயொரு தலைமையாகும்.
அந்தத் தலைமையின் சொந்த இயக்கத்துக்கு உள்ளேயே ஆயிரம் அரசியல் கூத்தாடிகள் இருந்திட்ட போதிலும் அரசியல் ஆடம்பரம் என்ற 'குரைச்சித் தண்ணீருக்குள் மல்லாந்துவிடாத' ஒரு அரசியல் தலைமை நமக்கு வாய்க்கப் பெற்றிருக்கின்றது. அந்த அரசியல் தலைமையால் மட்டும்தான் உள்ளுரில் அதிகார வெண் குதிரைகளின் ஆசீர்வாதத்துடன் நமக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்ற அரசியல் மற்றும் புவியியல் இருப்பு தொடர்பான நெருக்கடிகளை, இன்று ஜெனீவா வரையும் கொண்டு சென்று சேர்க்க முடிந்துள்ளது.
அது மட்டுமன்றி அண்மைக் காலம் வரையும் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு பேரினவாதத்தின் கொடு விஷப்பற்களால் உருவாக்கப்பட்டு வருகின்ற அநியாயங்களை OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் அமையத்துக்கு 'சிணுக்கிணாமல்' கொண்டு சேர்க்க முடிந்துள்ளது. இந்த புத்திசாலித்தனமானதும் இராஜதந்திரமானதுமான காய் நகர்த்தல்களின் மூலமாக நமது நிறைவேற்று அதிகாரத்தின் வெண் குதிரை வெளி நாடுகளில் எத்தகைய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்பது ஸ்பீக்கர் கட்டி எடுத்தச் சொல்ல முடியாத உண்மைகளாகும்.
இஸ்லாமிய நாடுகளின் அமையம் என்பது வெறுமனே அரபு நாடுகளை மட்டும் கொண்ட ஓர் அமைப்பு அல்ல. உலகில் முஸ்லிம் பெரும் பான்மையாக வாழும் நாடுகளைக் கொண்ட ஓர் அமைப்பாகும். உலக முஸ்லிம்கள் தங்களிடம் காணப்படுகின்ற அனைத்துப் பிரிவினைகளையும் ஒரு சிறு பொழுதுக்கேனும் கிடப்பில் போட்டு விட்டு முஸ்லிம் - இஸ்லாம் என்ற அடிப்படையில் கூடுகின்ற ஒரோயொரு வட்டக்களரி அதுவாகும்.
அந்த அமைப்பு வரை இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினையைக் கொன்டு சேர்ப்பதற்கு நமது 'கானாக் கோனா' அரசியல் ஜாம்பவான்களால் சாத்தியமா என்பதை அண்மைக் காலம் வரை அதிகார வெண் குதிரைகளின் ஆடம்பரமான பிரலாபங்களைப் பாடி தற்போது ஓய்வு எடுத்துள்ளவர்கள் அவசியம் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.
அப்படி ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு இலங்கையின் நிறைவேற்று அதிகார வெண் குதிரையைப் பார்த்து 'நாங்களும் இருக்கிறம்' பாணியில் ஏதாவது கவனஈர்ப்புக்கள் உண்மையில் செய்து இருக்குமாயின் அந்தக் காரணம் ஒன்றுக்காவது நமது தலைமை இந்தக் கோவணத்தைத் துறந்து அம்மணமாக நிற்க முடியாது.
அது மட்டுமன்றி சென்ற வாரங்கள் முதல் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத அல்லது பயங்கரவாத வன்முறையின்போது ஆயுதம் தாங்கிப் போராடாமல் விட்டாலும் அறிவின் கூர்மையை முழுவதுமாகப் பிரயோகித்து அதற்கான எதிர்வினைகளை ஆற்றியதும் மு.காவின் தலைமையே. இந்த சம்பவங்களை சமகால மனித உரிமையாளர்களினதும் சர்வதேசத்தின் கீர்த்தி மிக்க போராட்டக் காரர்களினதும் பாடுபொருளாக ஆக்கியமையின் பெரும் பங்கு மு.காவின் தலைமையையே சாரும்.
அது மட்டுமன்றி சம்பவம் நடைபெற்ற மறுதினமே இலங்கையில் உள்ள முஸ்லிம் ராஜதந்திரிகளை சும்மா 'கெஷூவல்' ஆக அழைத்து மிகவும் சீரியஸாக நமது பிரச்சினைகள் தொடர்பான ஒரு 'பவர் பொயின்ற் பிரசென்ரேஷன்' செய்ததன் மூலமாக ஏற்பட்ட எதிர்வினைகளை நாட்டின் அரச உயர் மட்டத்துடன் நட்புதலைப் பேணுவோர் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்.
அதனால்தான் நாட்டில் நடைபெறும் சிறு விஷயங்களை எல்லாம் சர்வதேசத்துக் கொண்டுபோய் அரசாங்கத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று அறிக்கை என்ற பெயரில் சில வெத்து வேட்டக்கள் தனது பின்னங்காலைத் தூக்கிக்கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்து விட்டன. இவை எல்லாவற்றையும் மோப்பமிடாது 'நாங்களும் அரசியல் பேசுவோம்' பாணியில் 'மு.காவின் தலைமை இன்னும் வெட்கமில்லாது அமைச்சுப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விடுகின்றனர்.
எனினும், தனியே ஒரு மு.காவின் தலைமையாக இருந்துகொண்டு எழுப்பும் குரலுக்கும் இந்த நாட்டின் நீதி அமைச்சராக இருந்து கொண்டு எழுப்பும் குரலுக்கும் இடையிலே காணப்படுகின்ற தாக்குதல் ரீதியான பாரிய இடைவெளியை நமது சமூகம் கட்டாயமாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஆகக் குறைந்தது தேர்தல் காலங்களில் மு.காவை தனது சமூகத்தின் குரலாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்களாவது அதன் பின்னாலுள்ள அசாத்தியமான அனுகூலங்களை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
மு.காவையும் அதன் தலைமையையும் தங்களது சொந்த அரசியல் எதிரியாகப் பார்ப்பவர்களைப் பற்றி அல்லது அவர்களின் அபிப்பிராயங்களைப்பற்றி நாம் கவலை கொள்ளாது விடலாம். ஆனால், சமூக நலனில் அக்கறை கொள்ளும் மக்களின் பொது அபிப்பிராயத்தை தனியாக்கிப் பார்த்த போதிலும் கூட இராஜினாமாவை செய்தாக வேண்டும் என்றும் அதன் மூலம் சர்வதேசத்தை நோக்கிய ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை மு.காவின் தலைமை உடனடியாக 'இனிஷியேற்' பண்ணியாக வேண்டும் என்கின்ற ஓர் கருத்தும் தன்னுள்ளே சக்தி பெற்று வருவதையும் நாம் எடுத்த எடுப்பில் உதாசீனப்படுத்திவிட முடியாது.
இதற்கு இன்னொரு வகையான உரிமை இருப்பதாகவும் நாம் கருதிக் கொள்ள இடம் உண்டு. அதாவது இவர்கள் எல்லாத்த தரப்பினரதும் சுண்டு விரல்கள் மு.காவின் தலைமையை நோக்கி மட்டுமே நீள்வதனால் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மு.காவின் தலைமைதான் இலங்கை முஸ்லிம்களின் பொதுப் புத்தியின் குறியீடு என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்கின்றார்கள் என்பதுமாகும். மேலதிகமான ஒரு காழ்ப்பணர்ச்சியினால் மட்டும் இக்கருத்தை 'மந்திரித்து எறியப்பட்ட கூழ் முட்டைகளாக' நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால், இலங்கையின் நீதியமைச்சர் என்ற கோவணத்தைக் கட்டிக்கொண்டு இருக்கின்ற இலங்கை முஸ்லிம்களின் பொதுத் தலைமை தற்போது அந்தக் கோவணத்தைத் துறப்பதானது உள்நாட்டுக்குள் அம்மணமான தோற்றப்பாட்டைத் தராது என்றாலும், வெளிநாடுகள் தொடர்பான அரசியல் ஆடுகளத்தில் நிராயுதபாணியாக நிற்கும் ஒரு போர் வீரனைப்போன்று நடைப் பிணமாகவே காட்சியளிக்கப் போகின்றார் என்பதை இலங்கையிலுள்ள பொதுப் புத்தியை நிர்மாணம் செய்யும் புத்திஜீவிகள் மிகப் போறுமையோடும் சமூக அக்கறையோடும் புரிந்துகொண்டாக வேண்டும்.
நீதியமைச்சர் என்ற கோவணம் வெளிநாடுகளில் அவருக்குச் சூடப்பட்ட தலைப்பாகையாகவே பார்க்கப்படுவதினால் அந்தத் தலைப்பாகையின் மேதாவிலாசத்துடன் அவர் செய்து காட்டியுள்ள சாணக்கியம்சார் அதிசயங்களை இலங்கை முஸ்லிம்கள் பரிந்து கொள்ளத் தவறினாலும் இலங்கையின் அதிகார வெண் குதிரயும் சம்பிக்க ரணவக்க போன்ற புத்திக் கூர்மையுள்ள பேரினவாத அரசியல் தலைமைகளும் தெளிவாகப் பரிந்து வைத்துள்ளனர்.
அதனால்தான் வெட்கப்படும் அமைச்சர் அதனை இராஜினாமாச் செய்துவிட வேண்டும் என்ற சம்பிக்க ரணவக்கவின் நக்கலும், முன்னொரு தடவை ஏற்பட்ட கோப உணர்ச்சியின்போது நிறைவேற்று அதிகார வெண் குதிரையின் 'விரும்பினால் வெளியேறலாம்' என்ற கௌரவமான எச்சரிக்கையும் வெளியாகி இருந்தன.
அத்துடன் சர்வதேசம் கூட பலசாலிகளின் அல்லது சண்டியர்களின் பக்கம் நிற்பதற்கு ஏற்றாற்போல தங்களின் மேற்தோலைக் கடினமானதாக்கிக் கொண்டுவிட்டது. இல்லாதுபோனால் யுத்தத்துக்குப் பின்னரான மனித உரிமை அத்துமீறல்கள் தொடர்பான நவநீதம் பிள்ளையின் மிகக்கடுமையான தொனியுடன் கூடிய அறிக்கைகள் இது வரைக்கும் தங்கள் முஷ்டியை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் அது இன்னும் நடைபெறவே இல்லையே.
இன்னொரு தேர்தல் அண்மித்து இருக்கும் இக்காலத்தில் மு.காவின் தலைமையின் சுயமான கோவண உரிதல் சிலவேளை எதிர்கால தலைப்பாகைக்கான உறுதியான அத்திவாரத்தை இடக்கூடும். ஆனால் சர்வதேசம் எங்கணும் ஓர் அம்மணமான காட்சியையே அது கட்டமைக்கும் என்பது மட்டும் நிச்சயமாகும். எனவே, தலைப்பாகையைத் துறக்கலாம், அதனால் யாரும் அம்மணமாகப் போகப்போவதில்லை. ஆனால் கோவணத்தை மாற்றுத் துணி வரும்வரை அவிழ்க்க முனைவது அவ்வளவு புத்திசாலித்தனமாக மாட்டாது.
ஷப்நம்
நன்றி: விடிவெள்ளி
No comments