விமலும் சம்பிக்கவும் இணைந்து சிங்களவர்களை முட்டாள்களாக்க முயற்சி – திஸ்ஸ அத்தனாயக்க
13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் இணைந்து பொரும்பான்மை சிங்கள மக்களை முட்டாள்களாக்க பார்க்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு பல காரணங்களை பலர் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் சிங்கள மக்கள் மத்தியில் 13 ஆவது திருத்தத்திற்கு எதிரான கருத்துக்களை திணிக்கின்றனர். மக்கள் மத்தியல் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அதைப்பற்றி அவர்கள் வாய்திறப்பதைக் காணவில்லை. கசினோ நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவற்றிற்கு எதிராகவோ குரல் கொடுக்கவில்லை.
இந்நிலையில் அவர்களின் செயற்பாட்டிற்கு அரசாங்கம் தலைசாய்த்து 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு யோசனையை முன்வைத்துள்ளது. இதேவேளை 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்குமானால் ஐக்கிய தேசியக் கட்சி அது குறித்து தனது அபிப்பிராயத்தை வெளியிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post Comment
No comments