Breaking News

உண்மையான குற்றவாளிகள் உல்லாசம் அனுபவிக்கிறார்கள்

photo_141 கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் கைதும் தடுத்து வைப்பும் அரசியல் அரங்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சியினர் மாத்திரமன்றி ஆளும் தரப்பிலுள்ளவர்கள் கூட இக் கைது தொடர்பில் பகிரங்கமாக அரசாங்கத்தை விமர்சிப்பதைக் காணமுடிகிறது.

அஸாத் சாலி பாரிய அரசியல் அதிகாரமோ அல்லது மக்கள் சக்தியோ கொண்ட ஓர் அரசியல்வாதியல்ல. அரசாங்கம் சொல்வதைப் போன்று அவருக்குப் பின்னால் எந்தவித பயங்கரவாத சக்திகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

காலத்துக்குக் காலம் அவர் பல்வேறு கட்சிகள் சார்பிலும் தனது முகத்தைக் காட்டி வந்திருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பில் பிரதி மேயராக இருந்த அவர் பின்னாளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்து கொழும்பு மாநகர சபைத் தேர்தலிலும் போட்டியிட்டார்.  இறுதியாக நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகளைப் பெற்ற அவர் பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து தேசிய ஐக்கிய முன்னணியின் கீழ் தனது அரசியல் வேலைத்திட்டத்தை தொடரும் ஏற்பாடுகளை முன்னெடுத்தார். 

இவ்வாறு அஸாத் சாலி அரசியல் ரீதியாக நிலையானதொரு கொள்கையையோ அல்லது போராட்ட ஒழுங்கு ஒன்றையோ கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையானதாகும்.

ஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாத சக்திகளால் பல்வேறு பிரசாரங்களும் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டபோது அவை தொடர்பில் அரசாங்கத்திடம் தட்டிக் கேட்கின்ற தைரியம் கொண்ட ஓர் அரசியல்வாதியாக அவர் மக்களால் நோக்கப்பட்டார். 

பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதும் ஹலால் சான்றிதழ் கொச்சைப்படுத்தப்பட்ட போதும் பர்தாக்கள் கேலிக்குள்ளாக்கப்பட்டபோதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி மௌனிகளாகவே இருந்தார்கள். பாராளுமன்றத்தில் அவர்கள் குரலெழுப்பாததோடு மாத்திரமன்றி முஸ்லிம்களுக்காக குரலெழுப்பிய மாற்று அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையூறு விளைவித்தார்கள்.

ஆனால் எந்தவித அரசியல் அதிகாரமோ அல்லது அரசியல் பலமோ இல்லாதிருந்த அஸாத் சாலி தனி மனிதமனாக நின்று பௌத்த பேரினவாத சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். இவ்வாறான சக்திகளின் நடவடிக்கைகளை கண்டும் காணாதிருக்கும் அரசாங்கத்தை கண்டித்தார். இந்தப் பிரச்சினைகளில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில்தான் அவர் சென்னைக்குச் சென்றிருந்த சமயம் சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி பயங்கரவாதத்தை தூண்டுவதாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அஸாத் சாலியின் அரசியல் பலமும் அவரது பின்னணியும் அரசாங்கத்திற்கு ஒன்றும் தெரியாததல்ல. இலங்கையின் புலனாய்வுப் பிரிவு சர்வதேச தரத்தில் புகழ்வாய்ந்து விளங்குகின்ற நிலையில் அஸாத் சாலி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறாரா இல்லையா என்பதைக் கண்டறிவது ஒன்றும் கடினமான காரியமும் அல்ல.

துரதிஷ்டவசமாக அவர் அரசியல் ரீதியான பழிவாங்கல் ஒன்றுக்காகவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது வெளிப்படையானதாகும். 

பயங்கரவாதத்தையோ அல்லது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையோ தூண்படுவதற்காக அரசாங்கம் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் அந்தப் பட்டியலில் அஸாத் சாலியை விடவும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

பட்டப்பகலில் தொழுகை நடத்தவிடாது தம்புள்ளை பள்ளிவாசலை தாக்கியவர்கள் இன்றும் கௌரவாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். பிரபல ஆடை வர்த்தக நிலையத்தை தாக்கி சேதப்படுத்தி குழப்பத்தை விளைவித்தவர்கள் மறுகணமே மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். மக்கள் மத்தியில் மோசமான இனவாதக் கருத்துக்களைப் பரப்பி இன முறுகல் ஒன்றுக்கு வித்திட முனைந்த பலர் இன்று வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசம் அனுபவிக்கிறார்கள். ஆனால் உரிமைகள் மீறப்பட்ட தனது சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒருவர் இன்று தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பயங்கரவாத குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவொன்றும் புதிய விடயமல்ல. ஆயினும் மக்கள் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அந்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அரசாங்கமே இதுவிடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படுதல் வேண்டும். இன்றேல் அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கின்ற குறைந்தபட்ச நம்பிக்கை கூட அற்றுப் போய்விடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி : விடிவெள்ளி

No comments