இலங்கையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் ; அமெரிக்கா குற்றச்சாட்டு
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புறக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக புறக்கணிப்புக்கள் கடந்த வருடத்தில் அதிகரித்திருந்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட 2012 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத சுதந்திரம் தொடர்பில் இலங்கையின் அமெரிக்கத்தூதரக அதிகாரிகள், இலங்கையின் அரச அதிகாரிகளுக்கு தமது கவன ஈர்ப்பை வெளியிட்டுள்ளதாக இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே மத சுதந்திரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன ரீதியான முரண்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத நம்பிக்கை இன சமூக அடிப்படையில் சமூக ரீதியான ஒடுக்குமுறைகள் இடம்பெறுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது குறைவாகக் காணப்பட்டாலும், பௌத்த கடும்போக்காளர்கள், முஸ்லிம்கள் மீது அதிகளவு அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments