Breaking News

பொதுநலவாய அமைப்பின் இன்றைய கூட்டத்தில் இலங்கை விவகாரம்!

6da0ffe64efea8adc3d091fff742ea31_Mலண்டனில் இன்று (26.04.13) வெள்ளிக்கிழமை நடைபெறும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயத்தை உள்ளடக்க வேண்டாமென சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோளை பொதுநலவாயத்தின் செயலாளர் நிராகரித்துள்ளமையானது இலங்கைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாயத்தின் கொள்கைப் பிரகடனங்கள், சம்பிரதாயங்களை இலங்கை மீறிச் செயற்படுவதால் அங்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை நடத்தக்கூடாதென சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும், கனடா உள்ளிட்ட நாடுகளும் பொதுநலவாய செயலகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலேயே இலங்கயின் கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் இலங்கை அரசு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாடு சம்பந்தமாகவும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உட்பட முக்கிய பல விடயங்களை ஆராய்வதற்காகவும் பொதுநலவாயத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான நடவடிக்கைக்குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இலண்டனில் இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போது லண்டனில் நடைபெறும் அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக்குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரங்களை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கவேண்டாம் எனக் கோரி அதற்கான நியாயாதிக்கங்களை பீரிஸ் முன்வைத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

எனினும், இதற்குப் பச்சைக்கொடி காட்ட கமலேஷ் சர்மா மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகின்றது. அதாவது, இலங்கை விவகாரம் நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட வேண்டும் என அநேக நாடுகள் வலியுறுத்துகின்றன. எனவே, நிகழ்ச்சிநிரலில் அவற்றை உள்ளடக்காமல் இருக்கமுடியாது என்று கமலேஷ் சர்மா பீரிஸிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக நம்பப்படுகிறது.

இதனால் இலங்கை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் இலங்கை தொடர்பான  முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக்குழுக் கூட்டத்தின் தலைமைப்பொறுப்பு இலங்கையின் நெருங்கிய நட்பு நாடான பங்களாதேஷிடம் இம்முறை இருக்கின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பங்களாதேஷிற்குச் சென்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. பொதுநலவாய மாநாடு விவகாரம் தொடர்பிலேயே இதன்போது அவர் கலந்துரையாடினார் எனவும் அறியமுடிகின்றது.

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டை நடத்தக்கூடாது என சர்வதேச நீதித்துறை சார்ந்த அமைப்புகள் அண்மையில் தென்னாபிரிக்காவில் நடத்திய கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தன.

அத்துடன், உள்நாட்டு அரசியல் கட்சிகளும், பொதுநலவாயத்தின் கொள்கைப் பிரகடனங்களை மீறி  இலங்கை  அரசு செயற்படுவதால் அதனை அங்கத்துவத்திலிருந்து நீக்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையிலேயே அரசின் கோரிக்கையை பொதுநலவாய செயலாளர் நிராகரித்துள்ளார். இது நேரடியானதொரு எச்சரிக்கை என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை ஆகிய விடயங்களாலேயே இலங்கைக்கு பொதுநலவாய மாநாட்டை நடத்தும் விடயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், திட்டமிட்ட அடிப்படையில் கொழும்பில் மாநாடு நடைபெறும் என இலங்கை அரசு தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றமை தெரிந்ததே.

No comments