Breaking News

பொது பல சேனாவுக்கு எதிராக வாய் திறந்தது ஜம்இய்யதுல் உலமா..

Web ஹலால் பிரச்சினையின் போது ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்ட பெயகள் இரண்டு, ஒன்று பொது பல சேனா அடுத்தது ஜம்இய்யதுல் உலமா, என்றாலும் ஹலால் விவகாரம் சற்று ஓய்ந்த பின்னர் பொது பல சேனாவின் பெயர் பேசப்பட்டாலு ஜம்இய்யதுல் உலமாவின் பெயர் ஊடகங்களில் மிகவும் குறைவாகவே உச்சரிக்கப்பட்டது.

மேலும் சகல சிக்கல்களிலும் பொது பல சேனா அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பக்கமே விரலை நீட்டியது என்றால் மிகையில்லை. என்றாலும் ஜம்இய்யதுல் உலமா பொது பல சேனாவை இதுவரை பகிரங்கமாக விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்றாலும் நேற்றைய தினம் பொது பல சேனாவின் கிரமவிமலஜோதி தேரர் அவர்களின் பழைய பல்லவியை மீண்டும் பாடத் துவங்கினார், அதில் இலங்கையில் அல்கைதா மற்றும் பயங்கரவாத குழுக்களும் இருப்பதாகவும், பல முஸ்லிம்கள் இந்தப் பயங்கரவாத குழுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளனர். உலமா சபை ஊடாகவே மேற்படி முஸ்லிம் பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையின் பின்னர் ஜம்இய்யதுல் உலமா சற்று காரசாரமான பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அந்த அறிக்கை வருமாறு:

April 18, 2013

ஊடக அறிக்கை

 

பயங்கரவாதம் குறித்த பொதுபலசேனா தலைவரின் கூற்று கண்டிக்கத்தக்கது

பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை தொடர்புபடுத்தி பொது பல சேனாவின் தலைவர் தெரிவித்ததாக இன்றைய (18.04.2013) வீரகேசரிப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியையிட்டு நாம் மிகவும் வருத்தமு, கவலையும் அடைகின்றோம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்த நாடு சுதந்திரமடைவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே செயற்பட்டு வருகின்ற ஒரு நிறுவனமாகும். இந் நாட்டை சுதந்திரமடையச் செய்வதிலும், வளப்படுத்துவதிலும் ஜம்இய்யா பெரும் பங்காற்றியுள்ளது.

2012 ஆம் ஆண்டு எமது நாட்டிற்காக ஜெனீவா வரை சென்று ஆதரவு பெற்றுக் கொடுத்த 85 வருடங்களைத் தாண்டிய ஒரு நிறுவனத்தை இன்று நேற்று முளைத்த பொது பல சேனா பயங்கரவாதமாக காட்ட முனைவது இந்நாட்டின் அரசுக்கும் இறைமைக்கும் எதிராக மேற்கொள்கின்ற மிக மோசமான குற்றச்சாட்டாகவே கருத வேண்டும்.

இந்நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயற்பட்டுவருகின்ற பொது பல சேனாவை பொறுமையோடு எதிர்கொண்டு மக்களை முறையாக வழிநடத்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது இந்நாட்டையும் சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்துவதாகவே அமையும். மேலும் அநாவசியமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி முஸ்லிம் சமூகத்தை சீண்டிப்பார்க்கின்ற அபாயகரமாக பரிசோதனையில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான எத்தகைய அநீதிகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்று எமது நாட்டின் மாண்புமிகு ஜனாதிபதி சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்து  அடுத்த நாளே இவ்வாறான பயங்கர அறிக்கைகள் பொது பல சேனாவினால் விடுக்கப்படுவது குறித்தும் பொது பல சேனாவின் சர்வதேச தொடர்புகள் குறித்தும் நாம் சந்தேகம் கொள்கிறோம்.

இவ்வாறான பயங்கரவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அமைப்புக்களை இந்நாட்டில் தடை செய்வதே இந்நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் சகவாழ்விற்கும் துணை செய்யும் என்று நாம் உறுதியாக நம்புவதோடு இது குறித்து சர்வதேச சமூகமும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

 

அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக்,

தேசிய செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா.

 

903347_10151452142619735_209979023_o

No comments