Breaking News

இலங்கை முஸ்லிம்கள் மீது அக்கரை காட்டும் இஸ்லாமிய நாடுகள்

ஏ.ஆர்.ஏ.பரீல்


‘முஸ்லிம்களின் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை. இவ்வாறான வதந்திகள் சர்வதேசத்தின் சதி’

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்கிய பெளத்த அமைப்புகள் மாத்திரம் இவ்வாறு கூறவில்லை. முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகள் சிலரும் இவ்வாறே தெரிவித்தார்கள்.

இக்கருத்தினை அவர்கள் நாட்டின் அதிஉயர் அதிகாரங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அடித்துச் சொன்னார்கள்.

சவூதி அரேபியாவை தலைமையகமாகக் கொண்டுள்ள முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் என்பன இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் குறித்து நாட்டின் தலைவர் ஜனாதிபதியிடம் கவலை தெரிவித்துள்ள அதேவேளை, குறிப்பிட்ட அரசியல்வாதிகள், சமூகம் குறித்து எவ்வித கவலையும் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் பதவிகளையும், சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்வதிலே கரிசனையாக இருந்தார்கள்.

ஆனால், கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்று முஸ்லிம்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளில் உண்மை யிருக்கிறது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

யுத்த அழிவுகளுக்குப் பின்னர் சமாதான சூழ்நிலையில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வுகள், மனித உரிமை மீறல்கள், ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிரான செயற்பாடுகள், நீதித்துறை மீதான சவால்களுக்கும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் தான் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை ஜனாதிபதி நன்கு உணர்ந்துள்ளார்.

சர்வதேசம் இதனை ஜனாதிபதிக்கு அழுத்தமாகவே உணர்த்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை உடன் நிறுத்த ஆவன செய்யுமாறு முஸ்லிம் நாடு களின் தூதுவர்கள் பலர் இராஜதந்திர ரீதி யில் ஜனாதிபதியைக் கோரியிருந்தார்கள். இது ஊடகங் களுக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை.

முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான செயற் பாடுகள் குறித்து ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியிருந்தார்கள்.

முஸ்லிம் நாடுகளின் அழுத்தம் காரணமாகவே கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி 15 முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களையும் இராஜதந்திரிகளையும் அழைத்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி பங்களாதேஷ், ஈராக், இந்தோனேசியா, ஈரான், எகிப்து, மலேசியா, குவைத், மாலைத்தீவு, நைஜீரியா, பாகிஸ்தான், பலஸ்தீன், துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் தூதுவர்களை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அவர்களுடன் அளவளாவினார். இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகள் குழுவுக்கு இலங்கையிலுள்ள பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல்- அகா தலைமை வகித்தார்.

15 முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை ஜனாதிபதி ஒரே இடத்தில் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளித்தது இதுவே முதல் தடவையாகும். முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துகள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அவர் மறைமுகமாக ஏற்றுள்ளதாக அமைந்துள்ளன.

‘இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயற்பாட்டினையும் அரசாங்கம் அனுமதிக்காது. அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்குமானால் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், இச் சந்தர்ப்பத்தை சமூகத் தலைவர்கள் கைநழுவ விடாது முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களின் ஆதாரங்களை ஜனாதிபதியிடம் சமர்பிக்க முன்வர வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் செயற்பாடுகளையும், எதிரான அறிக்கைகளையும் அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி சேவைகளும் நாளாந்தம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.

ஜனாதிபதி அலுவலகம் இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறது. இதற்கான அதிகாரிகள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். நாட்டில் இடம்பெறும் முக்கிய சம்பவங்கள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் சம்பவங்கள் தொடர்பில் ஆதாரங்களைக் கோரி நழுவிவிடுவது நாட்டின் தலைமைத்துவத்துக்கு ஏற்றதல்ல.

இடம்பெற்ற சந்திப்பில் ஜெனீவாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அமர்வில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென தூதுவர்கள் அனைவரும் ஜனாதிபதியிடம் கூட்டாகத் தெரிவித்தனர். ‘இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளில் நாம் தலையிடப் போவதில்லை. நீங்களே உள்வீட்டு விவகாரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று தூதுவர்கள் மறைமுகமாக தெரிவித்துள்ளமை இதிலிருந்து தெளிவாகிறது.

இரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான நெருக்கமான உறவுகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. உறவுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமெனவும் இணக்கம் காணப்பட்டது.

இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகள் குழுவுக்கு தலைமை வகித்த இலங்கையிலுள்ள பலஸ்தீன நாட்டுத் தூதுவர் கலாநிதி அன்வர் அல்- அகா கருத்துத் தெரிவிக்கையில்,

‘யுத்தமொன்றுக்குப் பின்னர் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியான அபிவிருத்திகள் இடம்பெறுவதை காணக்கூடியதாக உள்ளது. இலங்கையில் அபிவிருத்திப் பணிகளுக்கு முஸ்லிம் நாடு கள் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்’ என்றார்.

‘பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டில் அமைதிச் சூழலை ஏற்படுத்தியமைக்கு தூதுவர்கள் சார்பில் மகிழ்ச்சியையும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்சன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம என்போரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எக்மலட்டின் இஹ்சான் ஒக்லு ‘மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கலவரங்கள் அண்டைய பிராந்தியங்களுக்கு பரவ அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைமையகம் ஜித்தாவில் அமைப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனான அவசர கூட்டமொன்றிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெளத்த அடிப்படைவாதிகளால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை நோக்கத்தக்கதாகும். முஸ்லிம் நாடுகளின் கவனம் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளின் பக்கம் திரும்பியுள்ளது என்பதனை இது நிரூபிக்கிறது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது. முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் முறையிடப்பட்டால் அவை உடன் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் உறுதியளித்து நிலைமையைச் சமாளித்திருக்கின்ற அதே வேளை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

ஒன்றியம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெறும் நடவடிக்கைகளின் உண்மைத் தன்மையை சர்வதேசத்துக்கு தெளிவாக விளக்கியுள்ளது. ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ழாவியும் மற்றும் செயலாளர் நாயகம் அலி இர்ரஹ் தாகியும் கையொப்பமிட்டு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அடிப்படை சமய உரிமையாகும். இது முஸ்லிம்களின் கடமை முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடப்படுவதனை அங்கீகரிக்க முடியாது. முஸ்லிம்கள் பெளத்த மதத்துக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று முஸ்லிம்கள் அவமதிக்கப் படுவதையும் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது என்று குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்பப்பட்டுள்ளது.

அத்தோடு இன, மத வெறியர்கள் சட்டத்தை கையிலெடுப்பதனை அனுமதித்தால் அதன் விளைவு பாரதூரமாகி விடும். பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் சகல சமூகங்களுக்கும் சட்டம் பொதுவானதான நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அரசைக் கோரியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் சமய கலாசார உரிமைகளுக்கும் விடுக்கப்படுகின்ற சவால்களை உடனடியாக இலங்கை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு ஒன்றியம் மற்றும் முஸ்லிம் உலகின் சிவில் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்புகள் இலங்கை அரசின் மீது இதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் முஸ்லிம் தலைமைகளுடன் இலங்கை அரசு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஆராய விஷேட குழுக்களை நியமித்து முஸ்லிம்களின் சகவாழ்வுக்கு உறுதியளிக்க வேண்டுமெனவும் வேண்டியுள்ளது.

இதேவேளை இலங்கை முஸ்லிம்களின் களநிலவரங்கள் குறித்து ஆராயவும் அரசுடனும் முஸ்லிம் அறிஞர்களுடனும் கலந்துரையாடுவதற்கும் ஒன்றியத்தின் உயர் மட்ட குழுவொன்று இலங்கை வர விருப்பம் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுடன் கலந்துபேசிய ஜனாதிபதி ஒன்றியத்தின் தூதுக்குழுவின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். குழுவின் முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். அவ்வாறென்றாலே ஜனாதிபதியின் உறுதிகளில் சமூகம் நம்பிக்கை கொள்ள இயலும்.

இலங்கை முஸ்லிம்கள் சவால்களுக்கு முன்னால் ஒரே அணியாக பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் என்ற ஒன்றியத்தின் கோரிக் கைகைள எமது சமூகத்தின் அரசியல் தலை மைகள் கவனத்திற் கொள்ள வேண்டும். சுய நலன்களுக்காவும் தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஜனாதிபதியிடம் தலையசைத்துக் கொண்டிருக்காது சமூக நலன்களில் ஒன்று பட வேண்டும்.

சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் ஒன்றியம் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி அறிக்கையிடுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட வில்லை முஸ்லிம்கள் பயப்படத்தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் கவி பாடிக் கொண்டிருப்பது தான் கவலையைத் தருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் அவர்களை சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தி விடும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியத்தின் தலைவருக்கும் செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை முஸ்லிம்கள் மீதுள்ள பற்றுதலும் கருணையும் ஒரு சில எமது முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் இல்லையே என்பது தான் சமூகத்தின் தீராத கவலையாகும். அவர்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டுவானாக.

 

நன்றி : விடிவெள்ளி

No comments