பொதுபலசேனாவின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது பதவி மோகத்திலா?- மொகமட் பைசால் கேள்வி
பௌத்த பேரினவாத பொதுபலசேனா அமைப்பினரின் நடவடிக்கைகளை கண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் மௌனமாக இருப்பது பதவிகளில் உள்ள மோகமா என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இஸ்லாமிய தவ்வா அமைப்புகளுக்கு பௌத்த பேரினவாத பொதுபலசேனா அமைப்பினர் எச்சரிக்கைகளையும், அறிக்கைகளையும் விட்டு தங்களது அமைப்புகளையும் புத்தக நிலையங்களையும் வர்த்தக ஸ்தாபனங்களையும் முடிவிட வேண்டும் என்று கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் அரசாங்கமும, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் மௌனமாக வாய்திறக்காமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை.
அவர்களது பதவிகளில் உள்ள மோகமா அல்லது சமூகத்தின் மீது பற்றில்லையா என்ற ஒரு கேள்வி மக்கள் எண்ணத்தில் தோன்றியுள்ளது.
இவர்களை இனி மேலும் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. எனவே எமது மதத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே தப்லிக் ஜமாத், தவ்வீக்ஜமாத், ஜமாத்துல் இஸ்லாம், தரிக்கத்துல்ஜமாத், மற்றும் மலாயினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்காகவும் மதத்திற்காகவும் சேவையாற்ற முன் வேண்டும். அப்பொழுதுதான் இன்று முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சனைகளையும் சம்பவங்களையும் தடுத்து நிறுத்த முடியும்.
முஸ்லிம் மக்களின் துரித பாரிய வளர்ச்சியையும், மத வழிபாட்டு ஒழுக்க கட்டுபாடுகளையும், மத மார்க்கத்தின் வழிகாட்டல் அமைப்புகளையும், அவற்றின் நடவடிக்கைகளையும் கண்டு பொறாமை கொள்ளும் பௌத்த இனவாத மதவாத அடிப்படைவாதிகள் இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற சரித்திர சான்றுகளையே இல்லாதொழிக்கும் இழிசெயலில் இறங்கியுள்ளார்கள்.
அண்மைக்காலமாக துரதிஸ்டவசமாக முஸ்லிம் மக்கள் பயமுறுத்தப்படுவதும், காலம் காலமாக வாழ்ந்த காணிகளை அபகரிக்க முயற்சிப்பதும், இஸ்லாமிய மதத்தையும் கலாசாரத்தையும் அவமதித்து பேசுவதும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இவற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ளவும் நமது மதத்தையும், சமூகத்தையும் காப்பாற்றிக்கொள்ளவும் சகல இஸ்லாமிய அமைப்புகளும், சமூக நலன் விரும்பிகளும், புத்திஜீவிகளும், ஒன்றிணைந்து பிரிந்திருந்த தனித்தனியாக சமூகத்திற்காக பாடுபடுபடும் அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்பாகும்.
ஆகவே இவர்களின் ஒன்றுபட்ட சக்திக்காக அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார்.
தமிழ் வின்
No comments