ஹலால் விவகாரம்: இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஹலாலுக்கு எதிரான நடவடிக்கைகளும், பிரசாரங்களும் தீவிரமடைந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் ஹலாலின் எதிர்காலம் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளது.
அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிகஹெல உறுமயவும், பொது பலசேனாவும் இந்நாட்டில் ஹலாலை ஒழிப்பதற்கு காலக்கெடு விதித்துள்ளன. ஜாதிகஹெல உறுமய எதிர்வரும் ஏப்ரல் மாத சிங்கள, தமிழ் புத்தாண்டு தினம் வரையும் காலக்கெடு விதித்துள்ள நிலையில் பொதுபலசேனா மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
நாட்டில் ஹலால் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பு ஒழிக்கப்படாவிட்டால் பொதுபலசேனாவும் ஆதரவாளர்களும் உத்தியோகப்பற்றற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களாக மாறி ஹலாலை ஒழிப்பதாக எச்சரித்துள்ளனர். ஜாதிகஹெல உறுமய ஏப்ரல் 14ஆம் திகதிக்கு முன்பு ஒழிக்கப்படாவிட்டால் நாட்டில் ஒரு பாரிய கிளர்ச்சி வெடிக்கும் என பயமுறுத்தியுள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் கவுன்ஸிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும் மற்றும் அரசதரப்பு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பன இதில் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றன. ஹலால் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டுமாயின் அதனை அரசாங்கத்தின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் எனும் கருத்தையும் தற்போது சிலர் வலியுறுத்தி வருகிறார்கள். இந் நிலையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அரசாங்கத்திடமா? இன்றேல் ஜம்இய்யதுல் உலமா சபையிடமா? இருக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்ட சிலரின் கருத்துகளை விடிவெள்ளி வினவியது.
By: A.R.A.Fareel
வியாபார நிறுவனங்கள் ஹலால் அவசியம் என்றே கூறுகின்றன
உலமா சபை ஹலால் பிரிவு அதிகாரி மௌலவி முழப்பர்
ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் ஜம்இய்யதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் ஹலால் பிரிவிடம் இருக்க வேண்டுமா? அல்லது அரசாங்கத்தின் கீழ் இது கொண்டு வரப்பட வேண்டுமா? என்பதல்ல இன்று நிலவும் பிரச்சினை.
பொது பலசேனா அமைப்பு ஹலால் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறது. உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் பெரும் இலாபமீட்டுகிறது என்று பொது பல சேனா குற்றம் சுமத்துகிறது. அரசாங்கத்தின் அனுமதியின்றி பணம் திரட்டுவதாகவும் கூறுகிறது.
ஹலால் சான்றிதழை நாங்கள் இலவச சேவையாக நடத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா? என்று உலமா சபை வினவிய போது அதனை பொது பல சேனா மறுத்துவிட்டது. அரசாங்கம் ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை ஏற்று உலமா சபையின் மேற்பார்வையில் ஹலால் நடைமுறைப்படுத்த இணங்குவீர்களா என்று ஆலோசனை முன்வைத்ததையும் பொது பல சேனா ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவர்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் உலமா சபையிடம் இருக்க வேண்டுமா? இல்லை அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டுமா என்பது பிரச்சினையில்லை.மொத்தத்தில் ஹலால் தேவையில்லை என்பதே அவர்களது நிலைப்பாடாகும்.
எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பு நாட்டில் ஹலாலை ஒழிக்க வேண்டுமென பொது பல சேனா காலக்கெடு விதித்துள்ளது. நாம் தொடர்ந்தும் அரச மட்ட உயரதிகாரிகளிடமும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டின் 35 முன்னணி கம்பனிகளை அழைத்து ஹலால் சான்றிதழ் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறார். அந்தக் கம்பனிகள் ஹலால் சேவை அவசியம் தேவையென்று தெரிவித்திருக்கின்றன. ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்வதன் மூலம் விலை நிர்ணயிப்பில் பாதிப்புகள் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றன.
நாட்டின் அரசியல் உயர் மட்டம் ஹலால் பிரச்சினையொன்று இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வினை எட்டலாம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஹலால் பற்றிய தெளிவான விளக்கம் பெரும்பான்மையினருக்கு தேவை
மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க.)
‘முஸ்லிம்களுக்கு ஹலால் தேவை. ஹலாலை முஸ்லிம்களினால் விட்டுக் கொடுக்க முடியாது. பொதுபலசேனா அமைப்பு ஹலால் தொடர்பாக குற்றம் சுமத்தும் போது உலமா சபைக்கு இதன் மூலம் பெருமளவு நிதி கிடைக்கிறது. இந் நிதி நாட்டில் இஸ்லாத்தைப் பரப்புவதற்கும் தீவிரவாதத்துக்கும் பயன்பத்தப்படுகிறது என்கிறது.
இந்நிலையில் முஸ்லிம்களுக்கு ஹலால் தேவை என்பதால் யார் ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியினைச் செய்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் தலைமை, முஸ்லிம் இயக்கங்கள், உலமா சபைத் தலைவர்கள் கலந்துரையாடி இத்தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும்.
பல நாடுகளில் ஹலால் நடைமுறையில் உள்ளது. ஆனால் எல்லா நாடுகளிலும் நடைமுறைகள் ஒரே மாதிரியாக இல்லை. சில நாடுகளில் இந்நடைமுறை அரசாங்கத்தின் கண்காணிப்பிலும் சில நாடுகளில் தனியாக உலமா சபையின் கீழும் உள்ளன.
இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடுகளை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் அல்லது ஒரு அதிகார சபையாக உருவாக்க முடியும்.வர்த்தக அமைச்சின் கீழ் ஹலால் பிரிவை கொண்டு வரலாம். இவற்றில் எந்த நடைமுறை சிறந்தது என்பதை முஸ்லிம் தலைமைகளும் உலமா சபையும் புத்திஜீவிகளும் கலந்து ஆலோசித்து தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்.
முஸ்லிம்களுக்கென்று தனியாக அமுலில் உள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நீதியமைச்சின் கீழ் காதிக்கோடுகள் இயங்கி வருகின்றன. ஷரீஆ சட்டமும் அங்கு அமுல் நடத்தப்படுகிறது. இதில் எந்த பிரச்சினையும் உருவாகவில்லை. இதேபோன்ற அமைப்பொன்று உருவாக்கப்பட்டால் பொதுபலசேனா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுப்பதாக இருக்கும். குற்றச்சாட்டுகளும் இல்லாமற் போகும்.
பெரும்பான்மை மக்களுக்கு ஹலால் பற்றி சரியான விளக்கத்தினை சிங்கள ஊடகங்கள் வழங்கத் தவறிவிட்டன. இதுவே பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. சிங்கள ஊடகங்கள் ஹலால் பற்றிய தெளிவான விளக்கங்களை பெரும்பான்மை சமூகத்திடம் முன்வைக்கவேண்டும் என்றார்.
ஹலால் அரச கட்டமைப்பின் கீழ் உலமாக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்
பொறியியலாளர் எம்.எம். அப்துல் ரஹ்மான்
நாட்டில் இன்று ஹலால் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தற்போது நடைமுறையிலுள்ள ஹலால் நிர்ணயத்திற்கு எதிராக மூன்று குற்ற ச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதலாவது ஹலாலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிரசாரம் செய்யும் பெரும்பான்மை இன பெளத்த குருமாரும் ஒரு சில அரசியல்வாதிகளும் உலமா சபை, முஸ்லிம்களல்லாத பெரும்பான்மையினருக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் ஹலாலை பலாத்காரமாக திணிக்கிறது என்று குற்றம் சுமத்துகிறார்கள்.
அத்தோடு உலமா சபை ஹலாலைப் பயன்படுத்தி பெரும் இலாபம் ஈட்டுகிறது. ஹலால் சான்றிதழுக்கு கட்டணம் அறவிடப்படுவதால் அக்கட்டணம் பொருட்களின் விலை உயர்கிறது. எனவே ஹலால் என்கின்ற நடைமுறை அதிகம் இலாபமீட்டுகின்ற அல்லது பொருளாதார சுரண்டல் முறையாக அமைகிறது எனக் குற்றம்சாட்டுகிறார்கள். அடுத்தது ஹலால் மூலம் பெறப்படும் பெருமளவு நிதியை உலமா சபை முஸ்லிம் தீவிரவாதத்துக்கும் இஸ்லாத்தைப் பரப்புவதற்கும் பயன்படுத்துகிறது எனவும் பிரசாரம் செய்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கும் சகல விளக்கங்களையும் உலமா சபை முறையாக தெரிவித்திருந்தாலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
ஹலால் கண்டிப்பாக முஸ்லிம்களுக்கு அவசியமானதாகும். ஆனால் ஹலால் நிர்ணய நடைமுறை உத்தியோகபூர்வமாக அரச கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும். நம் நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஹலால் வங்கி முறை அதாவது இஸ்லாமிய வங்கி முறை தற்போது அரசாங்க அனுமதியுடன் அரச கட்டமைப்புக்குள் இயங்குகிறது. அவற்றைக் கண்காணிப்பவர்களாக உலமாக்கள் இருக்கிறார்கள்.
நீதித்துறையில் முஸ்லிம்களுக்கென்று ஒரு கட்டமைப்பு இயங்கி வருகின்றது. காதிக்கோடுகள் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அதாவது முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. அவையும் உலமாக்களாலும் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் தெரிந்தோராலும் நிர்வகிக்கப்படுகின்றன.
அதுபோலவே ஹலால் நிர்ணய நடைமுறையும் அரச கட்டமைப்புக்குள் வருவதுடன் இதில் இஸ்லாமிய சட்டதிட்டங்களை கவனிப்பதற்கும் ஹலால் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் உலமாக்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். உலமாக்களின் மேற்பார்வை இதில் அவசியம் இருக்க வேண்டும்.
உலகின் ஏனைய நாடுகளில் நடைமுறையிலுள்ள ஹலால் நிர்ணயம் அரசாங்க கட்டமைப்பின் கீழோ அல்லது தனியார் நிர்ணய நிறுவனங்களின் கீழோதான் இயங்குகின்றன. எனவே தற்போது நம்நாட்டில் எழுந்துள்ள சர்ச்சைக்கு உரிய தீர்வாக ஹலால் நிர்ணய நடைமுறையானது அரசாங்க கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு உலமாக்களால் நிர்வகிக்கப்படுவதே சிறந்ததாகும்.
ஹலால் சான்றிதழ் ஏற்றுமதியில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன்
‘அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஹலால் பிரிவு ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியினை திறம்பட சிறப்பாகச் செய்து வருகிறது என்றாலும் இன்று நாட்டு மக்களிடையே ஹலால் பற்றி தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. ஹலால் மூலம் திரட்டப்படும் நிதி சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஹலாலுக்கு எதிராக பரப்பப்பட்டுள்ள கருத்துக்களை நீக்க சிறுபான்மையினரான முஸ்லிம்களால் முடியாது. அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு உதவுவதாக இல்லை.
சமூகத்தின் இருப்புக்கு ஹலால் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது. எதிர்ப்புகளை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் வலுவடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்காணிப்பின் கீழ் ஹலால் அரச கட்டமைப்புக்கு கொண்டு வருவது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
இந்த கட்டமைப்பு ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், கட்டளைப் பணியகம் என்பன ஒன்றிணைந்ததாக அமைக்கப்பட வேண்டும்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் பிரிவில் 40 அனுபவமிக்க ஊழியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கட்டமைப்புக்குள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஹலால் சான்றிதழ் எமக்கு ஏற்றுமதியில் அதிகரிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஹலால் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் கேள்விகளை (Demand) உருவாக்கியிருக்கிறது. அத்தோடு ஹலால் இலங்கைக்கு வருகை தரும் அரபு உல்லாசப் பிரயாணிகளின் அதிகரிப்புக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. இவற்றை அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியான சட்டமிருக்கிறது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் காதிக்கோடு முறை மூலம் அமுல் நடத்தப்படுகிறது. இந் நீதிமன்றங்கள் நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்றன. எனவே இது போன்ற கட்டமைப்பின் கீழ் ஹலால் கொண்டுவரப்பட்டால் பெரும்பான்மையினர் கொண்டுள்ள சந்தேகங்கள் களையப்பட்டு சுமுக நிலை உருவாக வாய்ப்பாக அமையும்.
அரசாங்கத்தின் பணிப்புரையை செயற்படுத்துவோம்
முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். ஸமீல் (நளீமி)
‘ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமா அல்லது ஜம்இய்யத்துல் உலமா சபையிடமே இந்தப் பொறுப்பு இருக்க வேண்டுமா? என்பது பற்றி ஒரு அரசாங்க அதிகாரி என்ற வகையில் என்னால் கருத்துத் தெரிவிக்க இயலாது.
அரசாங்கத்தின் திட்டங்களை செயற்படுத்துவதே அரசாங்க அதிகாரிகளின் பணியாகும். எனவே முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அரசாங்கத்தின் பணிப்புரையின் படியே செயற்படும். ஹலால் அதிகாரம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் வழங்கப்பட வேண்டுமா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் தமது அனைத்து விடயங்களிலும் ஹலாலைப் பேணுகிறார்களா?
பாத்ததும்பறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் மலிக்
‘ஹலாலுக்கு எதிரான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் ஒரு குறுகிய கால கட்டத்துக்குள் வெகுவாக அதிகரித்து விட்டன. நாட்டின் தலைவரும் இப்பிரச்சினையில் தலையிடுமளவுக்கு பூதாகரமாகிவிட்டன.
ஜம்இய்யத்துல் உலமா சபை மீது பெளத்த பேரினவாதிகளும் ஒரு சில பெரும்பான்மை அரசியல்வாதிகளும் அதிருப்தி கொண்டுள்ளனர். உலமா சபை ஹலால் மூலம் பெருமளவு நிதி திரட்டி வருகிறது என்கிறார்கள். இந்நிதி ஹலால் மூலம் பெரும்பான்மையினரிடமிருந்து திரட்டப்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஹலால் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும். இல்லையேல் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் கலவரங்கள் ஏற்பட இதுவே காரணமாக அமைந்து விடும்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமையை அரசாங்கம் கையேற்பதே சிறந்தது. இதேவேளை, ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை மேற்பார்வை செய்யும் உரிமை மற்றும் பரிசோதனைகளை நடாத்துதல் என்பன உலமா சபையிடமே வழங்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு ஹலாலான உணவு தேவை. ஆனால் முஸ்லிம்கள் தமது அனைத்து விடயங்களிலும் ஹலாலைப் பேணுகிறார்களா? என்பதனையும் நாம் சிந்திக்க வேண்டும். இன்று எத்தனை முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வியாபாரத்தில் ஹலாலைப் பேணுகிறார்கள்.
தமது சொந்த வாழ்க்கையில் ஹலாலைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். ஹலால் உணவு மாத்திரம் ஹலால் வாழ்க்கையாக அமைந்துவிடாது.
நன்றி : விடிவெள்ளி
No comments